திருமங்கலம் அருகே பதிவாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் உண்ணாவிரதம்


திருமங்கலம் அருகே  பதிவாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் உண்ணாவிரதம்
x

திருமங்கலம் அருகே பதிவாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே பதிவாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

அலுவலகம் இடமாற்றம்

திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிராமத்தில் 1914-ம் ஆண்டு முதல் சார்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அருகில் உள்ள தும்மக்குண்டு, காங்கேயநத்தம், நக்கலக்கோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தாலுகா வாரியாக பத்திரப் பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் நிலையில், சிந்துபட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த, திருமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட காங்கேயநத்தம், நக்கலக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்னம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், இதுவரையில் செயல்பட்டு உள்ள சிந்துபட்டி சார்பதிவு அலுவலகம் செல்லம்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் இதனால் சிந்து பட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்லம்பட்டி செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உண்ணாவிரதம்

இந்த நடைமுறைக்கு இப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லம்பட்டிக்கு இடமாற்றம் செய்வதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், எனவே சிந்து பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படாததால் நேற்று 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிந்து பட்டி கிராமத்தில் உள்ள கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த சார் பதிவாளர் அலுவலகம் இன்று வரை நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இங்கிருந்து செல்லம்பட்டி செல்ல வேண்டுமானால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யாமல் சிந்து பட்டியில் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


Next Story