நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்


நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 13 Dec 2023 10:34 AM GMT (Updated: 13 Dec 2023 11:07 AM GMT)

22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று நடைபெற்றிருக்கும் பாதுகாப்பு மீறல் சம்பவம் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மக்கள் பிரதிநிதிகள் மீது புகைகள் கக்கும் கருவியை வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த 4 பேர் திடீரென தடுப்புகளைத் தாண்டி அவைக்குள் குதித்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி வண்ண புகைகளை வெளியேற்றக்கூடிய பொருட்களை வீசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்நாளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று நடைபெற்றிருக்கும் பாதுகாப்பு மீறல் சம்பவம் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

பன்னடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story