அரசு பஸ்கள் இயக்கப்படாததால் நள்ளிரவில் பயணிகள் தர்ணா
அரசு பஸ்கள் இயக்கப்படாததால் நள்ளிரவில் பயணிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பஸ்களின்றி அவதி
விநாயகர் சதுர்த்தி விடுமுறை, திருமண நிகழ்ச்சிகளுக்காக ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து சென்னை செல்ல வந்திருந்தனர். புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு போதிய பஸ்கள் கிடைக்காததால், அங்குள்ள பயணிகளும் திருச்சிக்கு வந்திருந்தனர்.ஏராளமானோர் ஒரே நேரத்தில் புறப்பட்டு வந்ததால் போதிய பஸ்கள் இன்றி அவர்கள் அவதி அடைந்தனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள் திருச்சிக்கு வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிச்செல்வது வழக்கம். அந்த பஸ்கள் அனைத்தும் புறப்பட்ட இடங்களிலேயே இருக்கைகள் நிரம்பி விட்டதால், அவை திருச்சி பஸ்நிலையத்துக்கு வராமல் பை-பாஸ் சாலையிலேயே சென்றுவிட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பயணிகள் தர்ணா
இதனால் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்த பயணிகள் போக்குவரத்து கழக அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் மத்திய பஸ் நிலையத்திற்குள் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான இரவு ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், விழுப்புரம் வரை 3 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்ய முடியும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பயணிகள் கைவிட்டனர். பின்னர் 2.30 மணி அளவில் விழுப்புரத்துக்கு இயக்கப்பட்ட பஸ்களில் அவர்கள் ஏறிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.