மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில், டவுன் சிக்கந்தர்புரத்தை சேர்ந்த முகமது அசாருதீன் கொடுத்த மனுவில், 'தங்களது பகுதி சாலை சேதமடைந்து கிடக்கிறது. அதனை சீரமைத்து தரவேண்டும்' என்று கூறி இருந்தார்.
டவுன் கட்டளை தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ''டவுன் கீழரதவீதியில் உள்ள வாறுகாலில் மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், வ.உ.சி. தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் கொடுத்த மனுவில், தெற்கு மவுண்ட் ரோட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்'' என்றும் கூறி இருந்தனர்.
இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி ஆணையாளர்கள் ஜஹாங்கீர் பாஷா, வெங்கட்ராமன், காளிமுத்து, வாசுதேவன், உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.