பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

மடத்துக்குளம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

மடத்துக்குளம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிருக்கு எமன்

வரமாக நினைத்தது சாபமாக மாறி விட்டது என்றால் அது நிச்சயமாக பிளாஸ்டிக் கண்டுபிடிப்புதான் என்று சொல்ல வேண்டும். பிளாஸ்டிக் கண்டு பிடிக்கப்பட்டபோது அதன் பயன்பாடு குறித்து அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் காலப்போக்கில் மண்ணில் மட்டுமின்றி கடலிலும் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகளிலிருந்து மண்ணையும் நீரையும் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் காற்றும் மாசுபட்டு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இயற்கையை படிப்படியாகக் கொல்லும் மரணமில்லாப் பொருள் உண்டென்றால் அது பிளாஸ்டிக் என்று சொல்லலாம். நமது பூமிக்கு தனக்குள் புதையும் எந்த பொருளாக இருந்தாலும் அதனை மக்க வைத்து உரமாக்கும் வல்லமை உண்டு. ஆனால் பூமித்தாயால் மக்கவைக்க முடியாமல், பல ஆண்டுகளாக புதையுண்டு மண்ணுக்கு மட்டுமல்லாமல் பல உயிர்களுக்கும் எமனாக மாறி வருவது பிளாஸ்டிக் கழிவுகளாகும்.

14 வகை பொருட்கள்

தினசரி டன் கணக்கில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளாட்சி நிர்வாகங்களால் சாத்தியமில்லாத விஷயமாகவே உள்ளது. எளிதில் மக்கும் தன்மையற்ற ஒரு முறை பயன்படுத்தும் டம்ளர்கள், தட்டுகள், கேரி பேக்குகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு 2019 ம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மடத்துக்குளம் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தவகை டம்ளர்கள் சிறு விழாக்கள், டாஸ்மாக் மதுபானக்கடை பார்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

கடும் நடவடிக்கை

பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்படும் டம்ளர்களை குடிமகன்கள் வாங்கி பயன்படுத்திவிட்டு வீதிகள், நீர்நிலைகள், விளைநிலங்களில் வீசிச்செல்கின்றனர். இதனால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசு உற்பத்திக்கும் துணைபுரிகிறது. எனவே கிராமப் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.


Related Tags :
Next Story