சி.பி.ஐ., வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியினருக்கு அழுத்தம் -ராகுல்காந்தி


சி.பி.ஐ., வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியினருக்கு அழுத்தம் -ராகுல்காந்தி
x

சி.பி.ஐ., வருமான வரித்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினருக்கு பா.ஜனதா அழுத்தம் கொடுக்கிறது என்று பாதயாத்திரையின் போது ராகுல்காந்தி தெரிவித்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் இருந்து 3-வது நாள் பாதயாத்திரையின்போது புலியூர்குறிச்சியில் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும், ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா கட்சியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை சரி செய்யவுமே இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சி பாதயாத்திரையை நடத்த முடிவு எடுத்தது. இந்த பாதயாத்திரையில் நான் அடிப்படை தொண்டனாக பங்கேற்று நடக்கிறேன். நான் தலைமையேற்று இந்த பாதயாத்திரையை நடத்தவில்லை. நீங்கள் தான் என்னை முன்னிலைப்படுத்துகிறீர்கள். நீங்கள் தான் என் தலைமையில் யாத்திரை நடப்பதாக சொல்கிறீர்கள். இது அரசியல் கட்சிகளுக்கு எதிரான பயணம் அல்ல. இது கருத்தியல் ரீதியான போராட்டம்.

கடினமான போராட்டம்

திறந்த மனதுடன் பன்முகத்தன்மையை ஆதரிப்பது என்பது ஒரு கருத்தியல். பன்முகத்தன்மைக்கு எதிராக பிடிவாதமாக ஒற்றைத்தன்மையுடன் செயல்படுவது மற்றொரு கருத்தியல். இந்த இரண்டு கருத்தியலுக்கும் இடையே மோதல் இருக்கிறது. இந்த கருத்தியல் போர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது தொடரும்.

இந்தியாவின் கட்டமைப்பை அவர்கள் சீர்குலைக்கிறார்கள். நாட்டின் கட்டமைப்பை சீர்குலைப்பவர்களுக்கும், காப்பாற்ற நினைப்பவர்களுக்குமான போராட்டம் தான் இது.

சி.பி.ஐ., வருமான வரிதுறை

இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்கிறார்களே? என நீங்கள் கேட்கிறீர்கள். பா.ஜனதாவின் வழிமுறை உங்களுக்கு தெரியும். பா.ஜனதா அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களையும் வைத்து அழுத்தம் கொடுக்கிறார்கள். சி.பி.ஐ., வருமான வரிதுறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பா.ஜனதா தனது கட்டுப்பாட்டில் வைத்து எங்களது கட்சியினருக்கு அழுத்தம் கொடுக்கிறது.

அந்த அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாத இரண்டாம் கட்ட தலைவர்களை நான் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் பா.ஜனதாவுடன் போராடுவதை விட அவர்களுக்கு நண்பர்களாக இருந்து விட்டு போகலாம் என முடிவெடுக்கிறார்கள். போராடுவதற்கு பதில் அவர்களுடன் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் நான் அப்படி அல்ல. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காகவும், பன்முகத்தன்மைக்காகவும் போராடுவது எனது குணம். அதனால்தான் நான் போராடுகிறேன்.

பணக்காரர்கள் கையில்

அரசியல் ஒற்றுமை அவசியம் தான். அதற்காக இந்த யாத்திரை நடத்தப்படவில்லை. மக்களை இணைப்பதுதான் இந்த பயணத்தின் நோக்கம். மக்களின் கருத்தை புரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இது. இரண்டு, மூன்று பெரும் பணக்காரர்கள் கையில் நாடு இருக்கிறது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரர் நம் நாட்டுக்காரர் ஆகியுள்ளார். இது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.

கட்சி தலைவர் ஆவாரா?

நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவேனா? என நீங்கள் கேட்கிறீர்கள். அதற்கான பதிலுக்கு தலைவர் தேர்தல் வரை காத்திருங்கள். இது தொடர்பாக என்னிடம் எந்த குழப்பமும் இல்லை.

நான் கார்ப்பரேட்டுக்கு எதிரானவன் அல்ல. கார்ப்பரேட்டை வைத்து சிறு, குறு நிறுவனங்களை நசுக்கும் மோசமான கொள்கைகளைத்தான் எதிர்க்கிறேன். தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் தேர்தல் வர இருப்பதை, திட்டமிட்டு நாங்கள் இந்த பாதயாத்திரையை நடத்தவில்லை. இதை தேர்தல் பிரசாரம் என தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். எல்லா மாநிலங்களிலும் சமமாகத்தான் பாதயாத்திரையை நடத்துகிறோம்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

காமராஜர் மண்

ராகுல்காந்தி பேட்டியை தொடங்கிய போது, காமராஜர் மண்ணில் இருந்து உங்களை (நிருபர்களை) சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பெருந்தலைவர் காமராஜரை நினைவு கூர்ந்தார்.

பின்னர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த நிருபர்கள், ராகுல்காந்தியிடம் இந்தி, ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் கேள்விக்கணைகளை தொடுத்தனர். அத்தனை கேள்விகளுக்கும் அவர் சளைக்காமல், சரளமாக பதில் அளித்தார்.


Next Story