தூத்துக்குடி மாவட்டத்தில் 12,855 டன் நெல் கொள்முதல்: கலெக்டர் செந்தில்ராஜ்


தூத்துக்குடி மாவட்டத்தில் 12,855 டன் நெல் கொள்முதல்: கலெக்டர் செந்தில்ராஜ்
x
தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 12 ஆயிரத்து 855 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முத்துகுமாரசாமி, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, வடக்கு இலந்தை குளம் பகுதியில் கடந்த ஆண்டு வெங்காயம் பயிரிட்டு இருந்தோம். இந்த பயிருக்கு காப்பீடு செய்து இருந்தோம். மழையால் பயிர் சேதம் அடைந்து விட்டது. அதற்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரம்பள்ளம் குளம், உப்பாற்று ஓடையை தூர்வாரி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தூத்துக்குடி மாநகருக்குள் வெள்ளம் வராமல் தடுக்கப்படும். உரத்தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் விரும்பி வாங்கக்கூடிய விலை குறைவான உரத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பணை

உடன்குடி அனல்மின்நிலையம் கழிவுநீர் விவசாய பயன்பாட்டுக்கான நீருடன் கலப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடியில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை தடுக்க வேளாண்மை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கருப்பட்டியில் கலப்படம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் கருமேனியாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். இந்த திட்டத்தை யாரும் எதிர்க்கவில்லை. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சடையநேரி கால்வாயில் இருந்து 8 கண்மாய்களுக்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது. ஆனால் சடையநேரி கால்வாயில் முழு கொள்ளளவான 500 கன அடி தண்ணீரை கொண்டு செல்ல முடியவில்லை. அதில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து சடையநேரி கால்வாயில் முழு கொள்ளளவில் வெள்ளநீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

கொள்முதல்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி 19 இடங்களில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையங்கள் மூலம் மொத்தம் 12 ஆயிரத்து 855 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இது வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு சுமார் 6 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. சில கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவில்லை என்ற புகார்கள் வந்தன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் ரேஷன் அரிசிக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தரமான நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். புது நெல், தரமான நெல் மற்றும் இடைத்தரகர்களை தவிர்க்கும் வகையில் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

இதே போன்று கூட்டுறவு சங்கங்களில் பல பிரச்சினைகள் உள்ளன. அந்த கூட்டுறவு சங்கங்களில் அரசு உத்தரவுப்படி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பொதுமக்களின் நகைக்கடன் உள்ளிட்டவை குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுடன் மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் 48 பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பயிர் காப்பீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ராபி பருவத்துக்கு ரூ.160 கோடி பயிர் காப்பீட்டு தொகை கோரி அனுப்பி உள்ளோம். இதில் மக்காச்சோளத்துக்கு ரூ.20 கோடி, உளுந்து பயிருக்கு ரூ.85 கோடி ஆக மொத்தம் ரூ.105 கோடி காப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பாசிப்பயறு, கம்பு, சோளம் ஆகிய பயிர்களுக்கு ரூ.55 கோடி வரவேண்டி உள்ளது. அந்த தொகை அடுத்த மாதத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அடுத்த மாதம் முழுமையாக வழங்கப்படும். கருப்பட்டியில் கலப்படம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோரம்பள்ளம் குளம், உப்பாற்று ஓடையை தூர்வார வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து உள்ளீர்கள். அதனை கவனத்தில் கொண்டு உள்ளோம். ரூ.12 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை மூலம் தூர்வார அனுமதி கிடைத்து உள்ளது. அந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அது மட்டுமின்றி ரூ.10 கோடி மதிப்பில் உப்பாற்று ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.5 கோடி சமூக பொறுப்பு நிதி மூலமும், ரூ.5 கோடி பொதுப்பணித்துறை மூலமும் வழங்கப்படுகிறது. இதற்காக அனுமதி கோரி சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி பெற்று மழைக்காலத்துக்கு முன்பு பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story