பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து 1 கி.மீட்டர் கட்டிடங்கள் கட்ட தடை: சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானம்
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு கட்டிடங்கள் கட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபைகூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு கட்டிடங்கள் கட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபைகூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடங்கள் கட்ட தடை
நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனத்திலிருந்து 1 கி.மீட்டர் தூரம் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக அறிவிக்க வேண்டும். மேலும் நிரந்தர கட்டிடங்கள் இருக்கக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டது. மேலும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எவ்வளவு கட்டிடங்கள் இருக்கின்றன என்பது உள்பட பல விவரங்களை சேகரித்து 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனத்தின் கரையோரம் வசிக்கும் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என உள்ளாட்சி பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து விவாதிக்க கூடலூர் தாலுகா மண்வயல் சமுதாய கூடத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில் தலைமை தாங்கினார். பொன் ஜெயசீலன் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் கரையோரம் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டிடங்கள் கட்ட தடை விதித்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முதல்கட்டமாக சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் திருத்தம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் உள்ளாட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.