புதுக்கோட்டையில்வாடிக்கையாளராக நடித்து டைல்ஸ் கடையில் ரூ.2½ லட்சம் திருட்டு


புதுக்கோட்டையில்வாடிக்கையாளராக நடித்து டைல்ஸ் கடையில் ரூ.2½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T15:45:25+05:30)

புதுக்கோட்டையில் வாடிக்கையாளராக நடித்து டைல்ஸ் கடையில் ரூ.2½ லட்சம் திருடிய வடமாநில வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

புதுக்கோட்டையில் வாடிக்கையாளராக நடித்து டைல்ஸ் கடையில் ரூ.2½ லட்சம் பணத்தை திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

டைல்ஸ் கடை

தூத்துக்குடி புதுகிராமத்தை சேர்ந்தவர் லினேஷ் (வயது 42). இவர் தூத்துக்குடி அருகே உள்ள மறவன்மடம் பகுதியில் டைல்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று கடையில் 2 பேர் பணியில் இருந்தார்களாம். அப்போது வடமாநில வாலிபர்கள் 2 பேர் கடைக்கு வந்து உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு தேவையான மரங்கள் மற்றும் டைல்ஸ் குறித்து விலையை விசாரித்து உள்ளனர். தொடர்ந்து பிறகு வருவதாக கூறிவிட்டு சென்று விட்டார்களாம். மதியம் 1.15 மணி அளவில் மீண்டும் அந்த கடைக்கு சென்று உள்ளனர். அங்கு இருந்த கடை ஊழியர் ஒருவர் சாப்பிட சென்று விட்டாராம்.

திருட்டு

இதனால் ஒருவர் மட்டும் கடையில் இருந்தாராம். அப்போது, வடமாநில வாலிபர்கள் 2 பேரும் மீண்டும் மரங்களை பார்த்து உள்ளனர். அப்போது கடையில் பணம் இருந்த மேஜை அருகே இருந்த கடை ஊழியர் கழிப்பறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி வடமாநில வாலிபர்கள், அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு தலைமறைவாகி விட்டனராம்.

போலீசார் வலைவீச்சு

இது குறித்து கடை உரிமையாளர் லினேஷ் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story