புரட்டாசி மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட அலைமோதிய பக்தர்கள்


புரட்டாசி மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட அலைமோதிய பக்தர்கள்
x
தினத்தந்தி 15 Oct 2023 12:30 AM IST (Updated: 15 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலில் தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

மகாளய அமாவாசை

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவும், முக்கிய பரிகார-புண்ணிய தலங்களில் ஒன்றாகவும் ராமேசுவரம் ராமநாதசுவாமி ேகாவில் விளங்கி வருகிறது.

அமாவாசை நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்கள் முன்னோருக்காக திதி, தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபடுவார்கள். தொடர்ந்து கோவிலுக்கு சென்று அங்குள்ள தீர்த்த கிணறுகளிலும் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசித்து செல்வார்கள்.

இவ்வாறு தர்ப்பணம் கொடுத்து வழிபட மாதாந்திர அமாவாசை நாட்கள் உகந்தது என்றாலும், அதில் மிகவும் உகந்ததாக ஆடி, தை மாத அமாவாசை நாட்களும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளும் கருதப்படுகிறது. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரள்வது வழக்கம்.

கூட்டம் அலைமோதியது

இந்த ஆண்டின் புரட்டாசி மகாளய அமாவாசை நேற்று என்பதால் வழக்கம்போல் கூட்டம் அலைமோதியது. அக்னி தீர்த்த கடலில் புனித நீராட அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

புனித நீராடிய பின்னர் கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பண, சங்கல்ப பூஜை செய்தனர். அரிசி மாவால் பிண்டம் செய்து அதை கடலில் கரைத்து முன்ேனார்களை வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராட சென்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து கிழக்கு கோபுர ரதவீதி சாலை வரையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தீர்த்தமாடினார்கள். இதே போல் சுவாமி தரிசனம் செய்வதற்கும் தெற்கு கோபுர வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, சன்னதி தெரு, ரத வீதிகள், திட்டக்குடி சாலை, தனுஷ்கோடி சாலை, பஸ் நிலையம் என நகரின் அனைத்து பகுதிகளும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன

சிறப்பு பஸ்கள்

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ராமேசுவரத்திற்கு 250-க்கும் அதிகமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ராமேசுவரம் கோவில் பகுதியை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோவிலில் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் கோவில் இணை ஆணையர் சிவராமகுமார் தலைமையில் உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மேற்பார்வையில் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story