தமிழகத்தில் 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்


தமிழகத்தில் 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்
x

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். எல்லநள்ளி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள ஆவின் பால் பண்ணை, பிங்கர்போஸ்ட் பகுதியில் ஜெர்சி பொலிகாளை பண்ணையை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊட்டியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் ஆவின் நிறுவனங்களில் பால் உற்பத்தி செய்வது, உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், பதப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு 152 பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

43 லட்சம் லிட்டர்

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு நடவடிக்கையால் தற்போது 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் 26 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதால், 29 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் ஆவின் நிறுவனம் நவீன மயமாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுயமரியாதை

ஹெல்த் மிக்சில் எந்த முறைகேடும் இல்லை. பா‌.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி இருந்தாலும், பொது அறிவு இல்லை. அவர் எப்படி காவல்துறை அதிகாரியாக பணியாற்றினார் என்பது வருத்தம் அளிக்கிறது. அகில இந்திய அளவில் தி.மு.க. ஒரு போதும் யாரை கண்டும் அஞ்சாது. இந்திய ஒருமைபாட்டிற்காக எதை வேண்டுமானாலும் இழப்போம். ஆனால், சுயமரியாதையை மட்டும் தி.மு.க. இழக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன், கலெக்டர் அம்ரித், ஆவின் பொது மேலாளர் வெங்கடாசலம், குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, ஆர்.டி.ஓ. துரைசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story