ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
துறைமங்கலம் புதுக்காலனி ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் புறநகர்பகுதியான துறைமங்கலம் புதுக்காலனியில் செல்வ கணபதி, ராஜ ராஜேஸ்வரி, பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் பல்வேறு பூஜைகளை தொடர்ந்து, முதற்கால யாக சாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 7.25 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், பிம்ப சுத்தி, நாடி சந்தானம், திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 9.30 மணியளவில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்தின் விமான கலசத்திற்கு குருக்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர். அப்போது கோவிலை சுற்றி கூடி நின்ற திரளான பக்தர்கள் பக்தி கோஷத்தை எழுப்பினர். அவர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் செல்வ கணபதி, ராஜ ராஜேஸ்வரி, பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை துறைமங்கலம் புதுக்காலனி பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கோவிலில் மண்டல பூஜை நடைபெறுகிறது.