துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம்
கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் தெற்காசிய மீனவர் தோழமை நிர்வாகிகள் மனு அளித்தனர்.
நாகர்கோவில்:
கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் தெற்காசிய மீனவர் தோழமை நிர்வாகிகள் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில் குமரி மாவட்ட கடலோர ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயசுந்தரம், ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை ரால்ப் மதன், புத்தன் துறை பங்குத்தந்தை வில்சன், தெற்கு எழுத்தாளர் இயக்க நிறுவன தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன், தூத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜான் அலோசியஸ், தெற்காசிய மீனவர் தோழமை குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பல்தசார் மற்றும் மீனவ பிரிதிநிதிகள் இணைந்து நேற்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்திடம் மனு கொடுத்தனர்.
கலெக்டர் வழியாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி, சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
சவுதி அரேபியா நாட்டில் ஈரான் கடற்கொள்ளையர்களால் பாதிப்புக்குள்ளான மீனவருக்கு நிதியும், நிவாரணமும் வழங்க வேண்டும். அங்கே மீன்பிடி தொழில் செய்கின்ற 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை சவுதி அரேபியா அரசு மூலம் உறுதி செய்ய வேண்டும். கடற்கொள்ளையர்கள் சவுதி அரேபியா கடலுக்குள் வந்து மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2000-ம் ஆண்டில் மகிமை என்ற குமரி மீனவரும், 2007-ம் ஆண்டு மணக்குடியை சேர்ந்த பணி அடிமை என்ற மீனவரும், 2010-ம் ஆண்டு குறும்பனையை சேர்ந்த குமார் என்ற மீனவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
உறுதி செய்ய வேண்டும்
இதுபோன்று நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடற்கொள்ளையரால் தாக்கப்பட்டும், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கடற்கொள்ளையர்கள் ஈரானிலிருந்து சவுதி அரேபியா கடலுக்குள் வந்து மீனவர்களின் மீன்பிடிப்பொருட்களையும் மீனவர்களின் செல்போன்களையும் திருடி செல்வது வழக்கமாக இருக்கிறது. இவ்வாறு ஈரான் கடற்கொள்ளையர்கள் திருடி செல்கிற பொருட்களுக்கு சவுதி அரேபியா உரிமையாளர்கள் பொறுப்பு ஏற்பதில்லை. மாறாக இந்திய மீனவர்கள் தான் அந்த பொருட்களை தங்கள் பணத்தில் வாங்கி மீண்டும் மீன் பிடிக்க செல்ல வேண்டும். தொடர்ந்து மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
எனவே இந்திய மீனவர்களை சவுதி அரேபியா அரசு தங்களது நாட்டு முதலாளிகளின் விசைப்படகுகளிலும் வேலைக்கு அமர்த்தி விட்டு மீனவர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் வழங்காமல் இருப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது. இந்திய அரசு உடனடியாக சவுதி அரேபியா அரசை தொடர்பு கொண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கு அதிகமான மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை சவுதி அரேபியா அரசு கடலிலே உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பு
மேலும் துப்பாக்கிச் சூட்டினாலும், தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் உரிய நிவாரணத்தை சவுதி அரேபியா அரசு வழங்க வேண்டும். தங்களது உயிருக்கு பயந்து நமது மீனவர்கள் சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் இருப்பதால் அவர்களது குடும்பங்கள் பசி பட்டினியில் வாட வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சவுதி அரேபியா அரசு மூலம் மீனவர்களுக்கு மீன் பிடிக்கிறபோது கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்தலை தடுத்து, மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.