விருத்தாசலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


விருத்தாசலத்தில்  போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

விருத்தாசலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, கடலூர் ரோடு இந்திரா நகரில் உள்ள 4 அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகள் மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள், வீடுகளை அகற்றுவதற்கு வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தாசில்தார் தனபதி தலைமையில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த மாதம் 16-ந்தேதி ஸ்டேட் வங்கி அருகே இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர், உள்ளிட்ட இரண்டு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இதை தொடர்ந்து, நேற்று விருத்தாசலம் ஆலடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். விருத்தாசலம் தாசில்தார் தனபதி மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆலடி சாலையில் இருந்த பாழடைந்த தகர கொட்டகை வீடு, ஒரு காலி மனையில் இருந்து சுற்று சுவர் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்நிலையில் அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து தாசில்தாரிடம் முறையிட்டனர். அப்போது, எங்களுக்கு கால அவகாசம் வேண்டும், அதற்குள் வீடுகளை இடிப்பதற்கு வந்தால் நாங்கள் எங்கே செல்வது, எங்களுக்கு வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லை எனக் கூறி கதறி அழுதனர். உடன் அங்கு வந்த போலீசார் பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அடுத்தடுத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story