திண்டுக்கல்லில் குடியரசு தினவிழா கோலாகலம்; கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்


திண்டுக்கல்லில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலெக்டர் விசாகன் தேசியக்கொடியை ஏற்றினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலெக்டர் விசாகன் தேசியக்கொடியை ஏற்றினார்.

குடியரசு தினவிழா

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெண் புறாக்கள், மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.

இதையடுத்து திறந்த ஜீப்பில் சென்றபடி ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படை, தீயணைப்பு துறையினர் ஆகியோரின் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் 70 போலீசாருக்கு முதல்-அமைச்சர் காவலர் பதக்கம், போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 59 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.

157 பேருக்கு பாராட்டு சான்று

அதோடு உள்ளாட்சித்துறை, வேளாண்மை, போக்குவரத்து துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள், சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார். இந்த விழாவில் மொத்தம் 157 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

அதையடுத்து முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆண்டு பராமரிப்பு தொகையாக ரூ.50 ஆயிரம், கூட்டுறவு வங்கி சார்பில் 38 பேருக்கு ரூ.50 ஆயிரம் கடனுதவி ஆகியவை உள்பட மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் மல்லர் கம்பம் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து அப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.5 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீட்டுக்கு கலெக்டர் நேரில் சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இந்த விழாவில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் விசாகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story