வேலூர் கோர்ட்டு, ஜெயிலில் குடியரசு தின விழா
வேலூர் கோர்ட்டு, ஜெயிலில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
வேலூர் கோர்ட்டு, ஜெயிலில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
குடியரசு தின விழா
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி என்.வசந்தலீலா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் வேலூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில், நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் நடந்த குடியரசு தின விழாவுக்கு சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார்.
சிறை அலுவலர்கள் குணசேகர், மோகன்குமார், சிறை நலஅலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றினார்.
தொடர்ந்து சிறைவாசிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. குடியரசு தினத்தையொட்டி சிறைவாசிகளுக்கு 3 வேளையும் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.
போக்குவரத்து அலுவலகம்
வேலூர் ரங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டல அலுவலக வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பொது மேலாளர் கணபதி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார்.
பின்னர் அவர், 10 பணிமனைகளில் சிறப்பாக பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள், கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில், துணை மேலாளர் பொன்னுபாண்டி (வணிகம்), கிளை மேலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று வேலூரில் உள்ள அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.