குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலம்: கவர்னர் தேசிய கொடி ஏற்றினார்


குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலம்: கவர்னர் தேசிய கொடி ஏற்றினார்
x

சென்னை மெரினா கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாலையில் நடைபெற்ற கவர்னர் மாளிகை தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டார்.

சென்னை,

நாட்டின் 74-வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னையில் கோலாகலம்

தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்து உள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.

தற்போது அங்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால் இந்த ஆண்டு மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காலை 7 மணியில் இருந்தே விழா அழைப்பாளர்கள் வரத் தொடங்கினர்.

கவர்னர், முதல்-அமைச்சர் வருகை

காலை 7.53 மணிக்கு விழாப் பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவர் வந்த காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார்.

அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் வந்தார். விழா பகுதியில் இருந்த அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து 7.55 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமி ரவியுடன் வந்தார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் வரவேற்றார்.

தேசிய கொடி ஏற்றினார்

பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத் தலைவர் மேஜர் ஜெனரல் இந்திரபாலன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் வெங்கட்ராமன், தாம்பரம் வான்படை நிலைய அதிகாரி ரத்திஷ் குமார், கடலோர காவல்படை (கிழக்கு) இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆனந்த பிரகாஷ் படோலா, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) சங்கர் ஆகியோரை கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருந்த கம்பத்தில் தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது அங்கு பறந்து வந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. உடனே தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

அணிவகுப்பு மரியாதை

பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி அணி வணக்க மேடையில் நின்றபடி, பல்வேறு படை அணியினர் மிடுக்குடன் வந்து செலுத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதலில் ராணுவப் படை பிரிவு, அடுத்ததாக கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு அணி வணக்கத்தை செலுத்தினர். தமிழக அரசு தொடங்கி உள்ள சிற்பி என்ற அமைப்பின் படைப்பிரிவுகள் புதிதாக இந்த ஆண்டு அணி வகுப்பில் சேர்க்கப்பட்டு இருந்தன.

கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய படகுகள் அணி வகுத்து வந்தன. அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப்படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 49 படைப்பிரிவினரின் அணி வணக்கத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

மாணவிகள் கலைநிகழ்ச்சி

அதன் பின்னர் அணி வகுப்பு மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா ஆதர்ஸ் மகளிர் கல்லூரி, ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பாத் வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முருகா தனுஷ்கோடி மகளிர் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 'பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்'' என்ற பாரதியாரின் பாடலுக்கு மாணவிகள் அழகாக நடனம் ஆடினர்.

அதன் பின்னர் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்ட கிராமியக்கலை நிகழ்ச்சிகளில் ராஜஸ்தான், மராட்டியம், அசாம் மாநில பெண்கள் நடனமாடினர். சிலம்பாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அலங்கார ஊர்திகள்

பின்னர் அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. முதலில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மங்கள இசை ஊர்தி வந்தது. அதில், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கள இசை, அதற்கு ஏற்ப பரத நாட்டியக் குழுவினரின் நடனம் ஆகியவை இடம் பெற்றன. அந்த ஊர்தியின் முகப்பில் 'தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகம் பொருத்தப்பட்டு இருந்தது. அடுத்ததாக, அரசின் திட்டங்கள் தொடர்பான அந்தத் துறையின் ஊர்தி வந்தது.

அடுத்தடுத்து காவல்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை என 20 அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் அணி வகுத்து வந்தன.

இந்த அணி வகுப்பில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஊர்தி புதிதாக இடம் பெற்றிருந்தது.

தேசியகீதம் இசைக்கப்பட்டு காலை 9.23 மணிக்கு விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

விழாவில் சபாநாயகர் அப்பாவு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி, கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமர்ந்தனர்.

தேநீர் விருந்து

குடியரசு தின விழாவையொட்டி நேற்று மாலை சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தேநீா் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்குமாறு முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்டவை அறிவித்திருந்தன.

இதற்கிடையே விருந்தில் பங்கேற்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் தொலைபேசி மூலமாக நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தார்.

முதல்-அமைச்சர் பங்கேற்பு

கவர்னரின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தில் பங்கேற்றார்.

விழாவில் விருந்தினர்கள் அமர்ந்து இருந்த பகுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அவருடைய மனைவி லட்சுமி ரவி, முதல்-அமைச்சர் ஆகியோர் நேரடியாக சென்று குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி (பொறுப்பு) எம்.துரைசாமி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல், தேசிய பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணன், முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தொழிலதிபர் வி.ஜி.பி. சந்தோஷம், இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

ஏற்கனவே அறிவித்தபடி கவர்னரின் தேநீர் விருந்து நிகழ்ச்சிகளை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தேநீர் விருந்தை புறக்கணித்தன.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஈரோட்டில் முகாமிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வமும் வெளியூரில் இருந்ததால் இருவரும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை என்று தெரிகிறது.


Next Story