கப்பலூர் சுங்கச்சாவடியில் ரூ.10 கோடி ஊழல் - மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு


கப்பலூர் சுங்கச்சாவடியில் ரூ.10 கோடி ஊழல் - மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு
x

கப்பலூர் சுங்கச்சாவடியில் ரூ.10 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை

திருமங்கலம்,

கப்பலூர் சுங்கச்சாவடியில் ரூ.10 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

திருமங்கலம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் மத்திய-மாநில அரசு இணைந்து சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது. இதில் ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது,

கப்பலூர் சுங்கச்சாவடியில் 10 கோடி ரூபாயை கள்ளத்தனமாக எடுத்துள்ளனர். 41 லட்சம் வாகனங்கள் இந்தப் பகுதியில் செல்வதாகவும் 11 லட்சம் வாகனங்கள் வி.ஐ.பி. வாகனம் என்று பொய்யாக கூறி மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அந்த 10 கோடி ரூபாய் வருடந்தோறும் கடந்த ஐந்தாண்டுகளாக யாருக்கு சென்றது என்பதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இதனால் இந்த சுங்கச்சாவடி மூடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தும் மத்திய மந்திரி நிதின் கட்காரி மவுனம் காப்பது எதற்காக என்பது புரியவில்லை.

ரூ.200 மானியம்

கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற தொடர்ந்து போராடுவோம். டெல்லியில் இதற்காக குரல் கொடுப்பேன். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் கொடுப்பேன்.

ரூ.200 கேஸ் மானியம் என்பது தற்போது அறிவிக்கப்பட்டது. மூன்று வருடங்களாக 800 முதல் 1200 ரூபாய் வரை விற்று கொள்ளையடித்த மோடி அரசு திடீரென 200 ரூபாய் மானியம் கொடுப்பது என்பது தேர்தலுக்கானது. நான்கு மாநில தேர்தலில் ஏதாவது வகையில் பலன் தரும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மிகவும் அறிவாளிகள். மோடியின் ஏமாற்று வேலைக்கு அடிபணிய மாட்டார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்பந்தத்தை நியாயமான நல்ல நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். ஜப்பான் பணத்தில் ஊழல் செய்கிற மோடி அரசை கண்டிக்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தலை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதா இருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து இருப்பார். எடப்பாடி பழனிசாமி யை பொறுத்தவரை அடிமை கட்சியாக பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதைக் கேட்கிறது.

இந்தியாவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி, வாசன் தலைமையிலான கட்சி ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவிக்கிறது.

வேறு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராக முடியும் இப்படிப்பட்ட பேச்சுகளை கொண்டு வருவதற்கான காரணமே உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகதான். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story