சுற்றுலா விசா கொடுத்து வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி
சுற்றுலா விசா கொடுத்து வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
தஞ்சாவூர்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈ.பி காலனி என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சுரேஷ்குமார். இவருடைய மைத்துனர் சுதன். இவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடம் சுதனை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு சுரேஷ்குமார் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் துபாய்க்கு ஓட்டல் வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறியதோடு, அதற்காக ரூ.90 ஆயிரம் கேட்டுள்ளனர். அதன்படி சுரேஷ்குமார் பல்வேறு தவணைகளாக ரூ.90 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த தம்பதி, வேலைக்கான ஆணை மற்றும் விசாவை கொடுக்காமல் சுற்றுலா விசாவை கொடுத்துள்ளனர். அந்த விசா மூலம் சுதன் துபாய் சென்றுள்ளார். தொடர்ந்து விசா காலம் முடிந்ததால் சொந்த ஊருக்கு சுதன் வந்துவிட்டார். இதுகுறித்து சுரேஷ்குமார் அந்த தம்பதியிடம் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை. அப்போது தான், ரூ.90 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.