மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டம்: யார் யார் பயனடைவார்கள்... விவரம் இதோ...!
தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8 வரை படித்து பிறகு அரசு பள்ளியில் படித்தவர்களும் பயன் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி,பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து,தமிழகத்தில் கலை,அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு பெயர் பதிவு செய்ய நேற்று முன்தினம் முதல் சிறப்பு முகாம்கள் வாயிலாக தகுதியான மாவைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம்,தகுதியான மாணவியரின் விவரங்களை
https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவு பிறப்பிதிருந்தது.
இந்நிலையில்,தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு,மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி,
* அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.
* இளநிலை,தொழிற்கல்வி,மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் நிதியுதவி.
* இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தபப்டும்.
* குறிப்பாக,மாணவிகள் ஏற்கனவே வேறு திட்டத்தில் பயன்பெற்று வந்தாலும்,இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர்.
* அதே சமயம்,2022-23 ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பில் புதிதாக சேர்ந்த மாணவிகளும் இத்திட்டத்திற்கு
https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
* கல்லூரிகளில் முதலாமாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும்,2 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .
* மேலும்,தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று பின் அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்திருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.
* ஆனால்,தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியருக்கு இந்த நிதியுதவி திட்டம் பொருந்தாது என்றும், அதைப்போல,2021-22 ஆம் கல்வியாண்டில்இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தில் பயனடைய இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா எண்ணை மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.