மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தமீம்அன்சாரி (வயது 31) விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டருகே உள்ள மாட்டுத்தொழுவத்தில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர். காலையில் எழுந்து அங்கு சென்ற தமீம்அன்சாரி, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமீம் அன்சாரிக்கும், அதே ஊரை சேர்ந்த சேக் செய்யது (30) இதயத்துல்லா (39) ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சேக் செய்யது, இதயத்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.