சித்த மருத்துவ திருநாள் நிகழ்ச்சி


சித்த மருத்துவ திருநாள் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:59+05:30)

தென்காசியில் சித்த மருத்துவ திருநாள் நிகழ்ச்சியை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

தென்காசி

நெல்லை, தென்காசி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் அகத்தியர் பிறந்தநாளை முன்னிட்டு 6-வது சித்த மருத்துவ திருநாள் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தொடங்கியது. இங்கு கண்காட்சிக்காக மூலிகைச்செடிகள், மூலிகை மருந்து, பண்டைய காலத்தில் பேறுகால அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்திய கருவிகளின் மாதிரிகள், யோகா, நீராவி குளியல் உள்ளிட்ட 21 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவரும், தனுஷ் குமார் எம்.பி.யும் அரங்குகளை பார்வையிட்டனர்.

முன்னதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மூலம் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு-2023 என்ற விழிப்புணர்வு கையேட்டை கலெக்டர் மற்றும் தனுஷ் குமார் எம்.பி. வெளியிட்டனர். தொடர்ந்து யோகா, ஓவியம், கட்டுரை போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நற்சான்றிதழ், கேடயம், ஊக்கத்தொகையும், 4-வது இடம் பெற்றவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயமும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி இன்றும் (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத்தலைவர் சுப்பையா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) வரதராஜன், நெல்லை சித்த மருத்துவக்கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ராமசாமி, உலகத்தமிழ் மருத்துவ கழக நிறுவனத் தலைவர் பாபநாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story