வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க-நீக்க சிறப்பு முகாம்கள்


வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க-நீக்க சிறப்பு முகாம்கள்
x

அரியலூரில் 2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க-நீக்க சிறப்பு முகாம்கள் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.

அரியலூர்

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு அரியலூர் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.

இந்த விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ, அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலோ மனு தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும், https://voterportal.eci.gov.in, www.elections.tn.gov.in என்ற இணையத்தளம் முகவரியிலும், Voter help line app என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள்

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிக்காக 2-ம் கட்டமாக நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம் நாட்களை பயன்படுத்தி 1.1.2023-ம் நாளில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி பயனடையலாம்.

இதுதவிர, இளம் வாக்காளர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க இனி ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர்-1 என ஆண்டுக்கு 4 நாட்களை தகுதி நாட்களாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முன்பதிவு செய்து கொள்ளலாம், அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் 18 வயது பூர்த்தியானவுடன் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

ஆதார் எண்ணுடன் இணைப்பு

மேலும் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை தூய்மைபடுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைத்தல் என்ற முக்கியமான பணியும் நடைபெற்று வருகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ள மேற்கண்ட சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story