மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி; திண்டுக்கல் அணி 2-வது வெற்றி


மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி; திண்டுக்கல் அணி 2-வது வெற்றி
x

திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் அணி 2-வது வெற்றி பெற்றது.

திண்டுக்கல்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதிற்க்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. 38 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் ஏ, பி, சி, டி, இ, எப், ஜி, ஹச் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சி பிரிவில் திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. சி பிரிவு போட்டிகள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பி.எஸ்.என்.ஏ., ஸ்ரீவி உள்ளிட்ட கல்லூரி மைதானங்களில் நடந்துவருகிறது.

ஏற்கனவே நடந்த போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றதோடு, மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதையொட்டி இன்று திண்டுக்கல் ஆர்.வி.எஸ். கல்லூரி மைதானத்தில் திண்டுக்கல்-ராமநாதபுரம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சசிந்தர் 22 ரன்கள் எடுத்தார். ராமநாதபுரம் தரப்பில் சியாம்சபரி, ஹரிஷ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய ராமநாதபுரம் அணி 46.3 ஓவர்களில் 135 ரன்களில் ஆட்டமிழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. திண்டுக்கல் வீரர்கள் சசிந்தர், நரேன்விமல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதேபோல் தாடிக்கொம்பு ஸ்ரீவி கல்லூரி மைதானத்தில் தஞ்சாவூர்-கள்ளக்குறிச்சி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கள்ளக்குறிச்சி அணி 39.1 ஓவர்களில் 95 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய தஞ்சாவூர் அணி 20.4 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தஞ்சாவூர் அணி வீரர் யோகேஸ்வரன் 37 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகிறது.Next Story