மாணவரை கொன்ற விவகாரம்: காதலி கிரீஷ்மாவை குமரிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை


மாணவரை கொன்ற விவகாரம்: காதலி கிரீஷ்மாவை குமரிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை
x

மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காதலி கிரீஷ்மாவை போலீசார் குமரியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது காதலனுக்கு விஷம் கொடுத்ததை அவர் போலீசாரிடம் நடித்து காட்டினார்.

களியக்காவிளை,

கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். குமரி மாவட்டம் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர்கள் இருவரும் காதலர்கள்.

இந்தநிலையில் கிரீஷ்மா, காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமாரும் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

வீட்டு 'சீல்' உடைப்பு

பின்னர் கிரீஷ்மாவை 7 நாட்களும், தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகிய 2 பேரை 5 நாட்களும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.

அதன்படி போலீசார் கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அவரது வீட்டுக்கு 'சீல்' வைத்திருந்தனர்.

கிரீஷ்மாவை அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த தயாரான போது நேற்று முன்தினம் காலையில் வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்தது. இதனால் தடயங்களை அழிக்க கிரீஷ்மாவுக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் வீட்டிற்குள் புகுந்தார்களா? வீட்டில் இருந்த ஆவணங்கள் ஏதேனும் திருடு போய் இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கிரீஷ்மாவை அழைத்து வந்து விசாரணை

இந்தநிலையில் நேற்று கேரள குற்றப்பிரிவு போலீசார் கிரீஷ்மாவையும், அவரது மாமாவையும் குமரி மாவட்டம் ராமவர்மன்சிறையில் உள்ள கிரீஷ்மா வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு சம்பவத்தன்று காதலன் வீட்டுக்கு வந்து சென்றது குறித்தும் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது குறித்தும் விசாரணை நடத்தினர்.

அப்போது நடந்த சம்பவங்களை கிரீஷ்மா நடித்து காட்டினார். அந்த நிகழ்வுகள் அனைத்தையும் போலீசார் வீடியோ பதிவு செய்து கொண்டனர். அத்துடன் கசாயம் ெகாடுக்க பயன்படுத்திய டம்ளர், நாட்டு மருந்து பொடி மற்றும் கொலைக்கு பயன்படுத்திய சில தடயங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமாரின் வீடு களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியில் உள்ளது. அந்த வீட்டுக்கு நிர்மல் குமாரை அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. கிரீஷ்மாவின் வீட்டில் நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

விடுதியில் விசாரணை

இதற்கிடையே இருவரும் காதலித்த போது பல இடங்களில் சுற்றி திரிந்ததாகவும், திற்பரப்பில் ஒரு விடுதியில் தங்கியதாகவும் கூறப்படுகிறது.

எனவே இன்று (திங்கட்கிழமை) திற்பரப்பில் உள்ள விடுதியிலும், அவர்கள் சுற்றி திரிந்த பகுதிகளிலும் போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்த இருப்பதாக தெரிகிறது.

கிரீஷ்மாவை அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story