பள்ளி, கல்லூரி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்


பள்ளி, கல்லூரி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
x

பள்ளி, கல்லூரி வாகனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

குடியாத்தம்

பள்ளி, கல்லூரி வாகனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது தகுதி சான்றிதழ், வாகன பதிவுக்கு வந்திருந்த வாகனங்களையும், பள்ளி வாகனங்களிலும் ஆய்வு செய்து அந்த வாகனங்களில் அமர்ந்து சிறிது தூரம் சென்று வந்தார்.

ஆய்வின்போது குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

கண்காணிப்பு கேமரா

குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு தகுதிச்சான்று, பதிவுச் சான்று உள்ளிட்டவைகளுக்கு வரும் வாகனங்களை தீவிரமாக ஆய்வு செய்து எந்திரங்கள் சரியாக உள்ளனவா என பார்வையிட்டு அதன் பின்னரே பதிவு செய்வது, தகுதி சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை அளிக்க வேண்டும். குறைபாடு உள்ள வாகனங்களை திருப்பி அனுப்பி குறைபாடுகள் சரி செய்த பின்னரே சான்றிதழ்கள் அளிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சாலைகளில் செல்ல தகுதியானவையா என அடிக்கடி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகள் வாகனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இன்னும் ஒரு மாத காலத்தில் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். அப்போது அந்த வாகனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி இல்லாமல் பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

350 பேருக்கு வீட்டுமனை பட்டா

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. அதில் 80 சதவீத மனுக்கள் மீது உரிய ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியானவர்களுக்கு கட்டாயம் உரிய ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றுப்பகுதியில் ஆக்ரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்த பொதுமக்களுக்கு முதல் கட்டமாக சுமார் 350 பேருக்கு முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் வீட்டுமனை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story