தமிழகத்தின் பல்லுயிர் பாரம்பரிய தலம்: அதிசயத்தின் பொக்கிஷம் அரிட்டாபட்டி


மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி மலை உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சமண சிற்பங்கள், படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், குடவரைக் கோவில்கள் இந்த பகுதியில் காணப்படுகின்றன. புராதனச் சின்னங்களுக்குப் பெயர் பெற்ற இந்த மலையில் கல், மண், மரங்கள் மட்டுமின்றி அதையும் கடந்து பல அரிய வகை உயிரினங்களும் வசித்து வருகின்றன.

மதுரை

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி மலை உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சமண சிற்பங்கள், படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், குடவரைக் கோவில்கள் இந்த பகுதியில் காணப்படுகின்றன. புராதனச் சின்னங்களுக்குப் பெயர் பெற்ற இந்த மலையில் கல், மண், மரங்கள் மட்டுமின்றி அதையும் கடந்து பல அரிய வகை உயிரினங்களும் வசித்து வருகின்றன.

குடவரை கோவில்

இந்தநிலையில் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள, 477.24 ஏக்கர் நிலப்பரப்பை, அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்குள்ள 7 மலைக்குன்றுகளை தெய்வங்களாக இந்த கிராம மக்கள் வழிபடுகின்றனர். இந்த மலைகளை பாதுகாத்து வருவதோடு இந்த மலைகளில் வாழும் பறவைகள் உள்பட பல் உயிர் இனங்களையும் கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இங்கு யாரும் வேட்டைக்கு செல்வதில்லை. மரங்களை வெட்டாமல் அதை வளர்த்து வருகின்றனர். இங்குள்ள மலைகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததை அரிட்டாபட்டி கிராம மக்கள் மலை மீது ஏறி பெரிய அளவில் போராட்டம் நடத்தி தடுத்தனர்.

இங்குள்ள மலைக்குன்றுகளில் பெய்யும் மழை நீரை தேக்கி வைத்து விவசாயம் செய்ய பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏரிகள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 16-ம் நூற்றாண்டின் பாண்டிய மன்னன் ஆட்சியில் மலை மீது ஆனைகொண்டான் ஏரி கட்டப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை சேமித்துவைக்க மலை அடிவாரத்தில் ஆனைகொண்டான் கண்மாய் உள்ளது. மலைகளில் சமணர் குடவரை குகைகள், படுக்கைகள், லகுலீஸ்வர் குடவரை கோவில், பாறையில் மகாவீர் புடைப்பு சிற்பமும், பழமை வாய்ந்த பிராமி வட்ட வடிவ தமிழ் எழுத்துக்கள், கல்வெட்டுக்கள் பொக்கிஷங்களாக பொதிந்து கிடக்கின்றன.

லகடு பருந்துகள்

அரிட்டாபட்டி மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான குடவரை கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த கோவிலில் லகுலீசர் புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த லகுலீசர் தமிழகத்தில் வேறு எங்கும் காண கிடைக்காத அற்புதம். ஒரு கையை தொடைமீது வைத்து, மற்றொரு கையில் தண்டம் தாங்கி சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் இவர் சிவனின் மறு உருவமாக பார்க்கப்படுகிறார்.

இந்தியாவில் அழிந்து வரும் அரிய வகை லகடு பருந்துகள் இந்திய அளவில் ராஜஸ்தானில் ஒரு ஜோடியும், அரிட்டாபட்டியில் ஒரு ஜோடி பருந்துகள் மட்டுமே உள்ளன. இதனை பறவை ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

275 பறவை இனங்கள்

கருங்குருவி, மழைக்குருவி, இரட்டைவால் குருவி, மனிதர்களைப்போல எழுந்து கழுத்தை உயர்த்தி நிற்கும் சில்வர் பில் கொக்கு, பனங்காடை, மஞ்சள் வாலாட்டி குருவி, தீக்கை அரிவாள், மூக்கன், சிவப்பு ஆள்காட்டி, மஞ்சள் ஆள்காட்டி, கருந்தோள், வல்லூறு, செம்பருந்து, கரும்பருந்து, பனை உழவாரன், ராஜாளி கழுகு, குட்டை கால் பாம்பு கழுகு, தேன் பருந்து, பகடு வல்லூறு, சிகப்பு வல்லூறு, வெள்ளைக்கறி கொம்பன் ஆந்தை, மல்கோ மைனா உள்பட 275 பறவை இனங்கள் உள்ளதாக கணடறியப்பட்டு உள்ளது. உயரமான மலைகளில் வசிக்கும் அபூர்வமான கொம்பன் ஆந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவில் மட்டும் வேட்டையாடும் பழக்கமும், சுமார் 2 அடி உயரமும் கொண்டது இந்த பறவை. மேலும் 700-க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களும் இந்த மலைகளில் கண்டறியப்பட்டுள்ளது. மலை பாம்புகள், எறும்பு தின்னி, அரியவகை தேவாங்கு, மான்கள் உள்ளன.

கிராமமக்கள் மகிழ்ச்சி

இதுகுறித்து பல்லுயிர் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

அரிட்டாபட்டி கிராமத்தில் கால்வாய் பாசனம் இல்லாமல் இந்த 7 மலைகளில் விழும் மழை தண்ணீரை தேக்கி வைத்து விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு ஏரிகளும், நீர் நிலைகளும், ஓங்கி வளர்ந்துள்ள மரங்களும் பல்லுயிர் இனங்கள் வசிக்க ஏற்ற இடமாக உள்ளன. அழியும் விளிம்பில் உள்ள அபூர்வ பருந்து இனத்தை சேர்ந்த லகடு பருந்து ஒரு ஜோடி ராஜஸ்தானிலும், அரிட்டாபட்டியில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இங்கு பல்லுயிர்களை பாதுகாக்க மண் சார்ந்த மரங்களை வளர்க்கவும், நீர் நிலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிட்டாபட்டியை சேர்ந்த சிவலிங்கம் கூறியதாவது, இங்குள்ள ஏழு மலைகள் எங்கள் காவல் தெய்வங்கள். பாரம்பரிய வழக்கப்படி பாறைகளில் உணவு பரிமாறி சாப்பிடும் மலைகளை வணங்கும் விழா கொண்டாடி வருகிறோம். இங்கு வசிக்கும் பல்லுயிர் இனங்களையும், பாரம்பரிய வரலாற்று பதிவுகளையும் பாதுகாத்து வருகிறோம். பல்லுயிர் பாதுகாப்பு தலமாக அரிட்டாபட்டியை அரசு அறிவித்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.


Next Story