மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு; நண்பர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு; நண்பர் படுகாயம்
x

மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயமடைந்தார்.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்து

மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் ஏறக்கல்விளையை சேர்ந்தவர் முருகன் மகன் சகில் (வயது 21). அன்னியோடு பகுதியை சேர்ந்த குமார் மகன் அபீஷ் (21). இவர்கள் இருவரும் விசேஷ நிகழ்ச்சியில் அலங்கரிக்கும் தொழில் செய்து வந்தனர்.

நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 10½ மணிக்கு ஆற்றூரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சகில் ஓட்டினார்.

கல்லுப்பாலம் வளைவு பகுதியை சென்றடைந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென சகில் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. இதனால் சாக்கடையின் சிலாப் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வாலிபர் சாவு

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சகில் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

அவருடன் சென்ற அபீஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சகில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story