அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது


அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது
x

கோத்தகிரி அருகே அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி அருகே உயிலட்டி, குன்னியட்டி கிராமங்களில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகள் தொடர்ந்து நடமாடி வந்தது. இதையடுத்து கரடிகளை பிடிக்க கடந்த ஜூலை மாதம் வனத்துறையினர் வைத்த கூண்டில், 2 குட்டி கரடிகள் மட்டும் சிக்கின. தாய் கரடி கூண்டில் சிக்காமல் தப்பி சென்றது. பிடிபட்ட 2 கரடிகள் முதுமலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து தாய் கரடி, தனது குட்டிகளை தேடியவாறு உயிலட்டி, குன்னியட்டி, கூக்கல் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் ஆக்ரோஷத்துடன் உலா வந்தது. குன்னியட்டியில் தேயிலை மூட்டைகளை சுமந்து சென்ற தொழிலாளியை துரத்தியது. இதனால் தொழிலாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த கரடியை பிடிக்க, 2 இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.

கரடி சிக்கியது

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் கரடி சிக்கி பிடிபட்டது. இதுகுறித்து கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பிடிபட்ட கரடியை கூண்டுடன் சரக்கு வாகனத்தில் ஏற்றி, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார், தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் குமார் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கரடி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த 3 கரடிகளும் பிடிபட்டதால், அப்பகுதி கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story