வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி சாவு


தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்

தென்காசி

தென்காசியில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கட்டிட தொழிலாளிகள்

தென்காசி கீழப்புலியூா் புலியூா் தெருவை சோ்ந்தவா் வடிவேல்முருகன் (வயது 50). இதே பகுதியை சோ்ந்தவா்கள் பிரசாந்த் (22), குத்தாலிங்கம் (40).

இவா்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளா்கள். கட்டிட வேலைகள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் 3 பேரும் நேற்று கீழப்புலியூா் உச்சிமாகாளி 1-வது தெருவை சோ்ந்த இசக்கி என்பவருடைய வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு `பீம்' அமைக்கும் வேலை நடைபெற்றது.

சுவர் இடிந்தது

அப்போது அருகில் உள்ள திருப்பாற்கடல் என்பவருடைய வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வடிவேல்முருகன் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் பிரசாந்த், குத்தாலிங்கம் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில், பிரசாந்த் முதல் உதவி சிகிச்சைக்குப்பின் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாா். குத்தாலிங்கம் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story