கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தை
பந்தலூரில் கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
பந்தலூர்
பந்தலூர் நத்தம் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வளர்த்து வரும் கால்நடைகள், நாய்களை சிறுத்தை ஊருக்குள் புகுந்து கடித்து கொன்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவரது பசுமாடுகள், கன்றுக்குட்டி அருகே உள்ள புல்வெளிக்கு மேய சென்றன. ஆனால், கன்றுக்குட்டி மட்டும் திரும்பி வரவில்லை. தொடர்ந்து அவர் தேடி பார்த்த போது, தேயிலை தோட்டத்திற்குள் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். சேரம்பாடி கால்நடை டாக்டர் நவீன்குமார் கன்றுக்குட்டி உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் உடல் பாகங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கை வந்த பின்னர் சிறுத்தை தாக்கி இறந்ததா என்பது தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். குடியிருப்பு மற்றும் தனியார் பள்ளி அருகே கன்றுக்குட்டியை கடித்து கொன்ற சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.