விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
x

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

ஆண்டிமடம்:

படம் உடைப்பு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், ஓலையூர் கிராமம் அண்ணா நகரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிழற்குடை கூரையின் மேற்பகுதியில் திருமாவளவனின் புகைப்படத்துடன் கூடிய பெயர் பலகை ஒட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த வழியாக சென்ற சிலர், நிழற்குடையில் இருந்த பெயர் பலகையில் திருமாவளவனின் படம் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்து ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசாப்பிள்ளை முன்னிலையில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் ஓலையூர் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, படத்தை உடைத்தவர்களை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story