பொங்கல் பண்டிகையை கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு


பொங்கல் பண்டிகையை கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு
x

நாகர்கோவிலில் நடந்த விழாவில் பொங்கல் பண்டிகையை சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் கொண்டாடினார். இதில் பாரம்பரிய உடை அணிந்து போலீசார் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நடந்த விழாவில் பொங்கல் பண்டிகையை சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் கொண்டாடினார். இதில் பாரம்பரிய உடை அணிந்து போலீசார் பங்கேற்றனர்.

போலீஸ் சார்பில் பொங்கல் பண்டிகை

தை மகளை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் முன்கூட்டியே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அதன்படி நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலையில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். இதேபோல் சூப்பிரண்டு மனைவி விஷாலா, மகன் நிஸ்விக் மற்றும் போலீசார், அவருடைய குடும்பத்தினர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களில் ஆண் போலீசார் வேட்டி, சட்டையும், பெண் போலீசார் சேலையும் அணிந்திருந்தனர்.

விளையாட்டு போட்டி

சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொங்கலிடும் நிகழ்ச்சியை காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார்.

இதன்பிறகு போலீஸ் குடும்பத்தாரின் பிள்ளைகளுக்கு தனியாகவும், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினரில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாகவும் பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் போலீஸ் சூப்பிரண்டும் கலந்து கொண்டு விளையாடி போலீசாரை மகிழ்வித்தார்.

பசுவுக்கு உணவளிப்பு

பொங்கல் பண்டிகையின்போது உழவர்களுக்கு உதவி புரியும் காளைகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவற்றை குளிப்பாட்டி, அழகுபடுத்தி உணவு கொடுப்பது வழக்கம்.

அதை நினைவுகூறும் விதமாக ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவுக்கு கொண்டுவரப்பட்ட பசுவுக்கும், அதன் கன்றுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், அவருடைய குடும்பத்தினரும் உணவு கொடுத்து மகிழ்ந்தனர்.

விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சேம் வேதமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story