திண்டுக்கல்லில் 3 வீடுகளில் துணிகரம்; 40 பவுன் நகைகள், ரூ.3¼ லட்சம் திருட்டு
திண்டுக்கல்லில் 3 வீடுகளில் புகுந்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.3¼ லட்சத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் 3 வீடுகளில் புகுந்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.3¼ லட்சத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம், நாயக்கர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). சலவை தொழிலாளி. இவரது மனைவி அங்காள பரமேஸ்வரி (45). இவர்களுக்கு மணிகண்டன் (27) என்ற மகனும், சிவசங்கரி (24) என்ற மகளும் உள்ளனர். இதில், மணிகண்டனுக்கு திருமணமாகி துர்கா என்ற மனைவி உள்ளார்.
இந்தநிலையில் முருகேசன், தனது மனைவியுடன் நேற்று வழக்கம்போல் சலவை வேலைக்கு சென்றுவிட்டார். அவர்களது மகன், மகள், மருமகள் ஆகிய 3 பேரும் கரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதனால் முருகேசனின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 22 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
இதற்கிடையே நேற்று இரவு முருகேசனும், அவரது மனைவியும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைத்திருந்த நகை, பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர்கள் உடனடியாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மலைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி காட்டுதெரு, சிறுமணி நகர், பகவான் சேஷாத்திரி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுதவிர கைரேகை நிபுணர்கள் வந்து, தடயங்களை சேகரித்தனர்.
மேலும் 2 வீடுகளில்...
இதேபோல் திண்டுக்கல் என்.எஸ்.நகர் ராஜகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசலு. இவரது மனைவி புவனேஸ்வரி (52). இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அப்போது மர்மநபர்கள் வெங்கடேசலுவின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 13 பவுன் நகை, மற்றும் ரூ.2½ லட்சத்தை திருடி சென்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி (82), தனது வீட்டை பூட்டிவிட்டு தேனியில் உள்ள தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்காக சென்றார். இதனால் பூட்டிக்கிடந்த அவரது வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
இந்த 3 கொள்ளை சம்பவங்கள் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் 3 வீடுகளில் நகை, பணம் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.