ஊரக வேலை திட்டத்தில் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்


ஊரக வேலை திட்டத்தில் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி  விவசாய தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
x

ஊரக வேலை திட்டத்தில் கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்கக்கோரி சேலத்தில் விவசாய தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்,

தர்ணா போராட்டம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் நாள் ஒன்றுக்கு கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று விவசாய தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யு ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட 500-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

வீட்டுமனை பட்டா

இந்த போராட்டத்தின்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்கி விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கான ஆதார விலையை எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைபடி வழங்க வேண்டும்.

வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை நிலம் ஒதுக்கீடு செய்து ரூ.10 லட்சத்தில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற 400-க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


Next Story