பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், சூரியனின் முகம் தெரியாத அளவுக்கு கருமேக கூட்டம் வானத்தை ஆக்கிரமித்து கனமழையாக நேற்று கொட்டித்தீர்த்தது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
காலை 7.30 மணி அளவில் இந்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்குள் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளுக்கு கொட்டும் மழையில் நனைந்தபடி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் விடுமுறை என பள்ளி நிர்வாகம் தெரிவித்ததும் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) திண்டுக்கல் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.