இன்று குடியரசு தினவிழா:கலெக்டர் இன்று கொடி ஏற்றுகிறார்-பாதுகாப்பு பணியில் போலீஸ் தீவிரம்


சேலத்தில் இன்று நடக்கும் குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி மாநகரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம்

குடியரசு தினவிழா

நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றுகிறார்.

தொடர்ந்து அவர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் தலைமையில் மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, சேலம் மாநகர் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குடியரசு தினவிழா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில் நிலையத்தில் சோதனை

இதனிடையே, சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் வழியாக சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ரெயில் நிலையத்திற்கு பயணிகள் கொண்டு வந்த உடைமைகளை மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் வெடிகுண்டுகள் வைத்து யாரேனும் நாசவேலையில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


Next Story