கொடைக்கானலில் காற்றுடன் சாரல் மழை; மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு


கொடைக்கானலில் காற்றுடன் சாரல் மழை; மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

கொடைக்கானலில் காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதியில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று காலை முதல் இரவு வரை சில இடங்களில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. தொடர் மழை எதிரொலியாக நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, தேவதை அருவி, பாம்பார் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்தநிலையில் வத்தலக்குண்டு மற்றும் மேல்மலை செல்லும் மலைப்பாதைகளில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதற்கிடையே மலைப்பாதையில் மரக்கிளைகள் அடிக்கடி முறிந்து விழுவதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகளில் மரம் அறுப்பதற்காக எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பூம்பாறை அருகே மலைப்பாதையில் விழுந்த சிறிய மரத்தை பயணிகள் ஒத்துழைப்புடன் அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டர்கள் அகற்றினர். கொடைக்கானலலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. நேற்று வந்த சில சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர். காற்று வீசியதால் அவ்வப்போது நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story