பழனியில் போக்குவரத்து மாற்றம்
கும்பாபிஷேகத்தையொட்டி பழனியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி பழனியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி போலீஸ் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் அதிகம் வருகை தருவர். எனவே பாதயாத்திரை பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் மற்றும் வருகிற 4-ந்தேதிகளில் பழனிக்கு வரக்கூடிய வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தேனி, மதுரையில் இருந்து பழனி வழியே செல்லக்கூடிய கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் திண்டுக்கல், தாடிக்கொம்பு, சாலைப்புதூர், ஒட்டன்சத்திரம் பைபாஸ், காவேரியம்மாபட்டி பிரிவு, தாழையூத்து வழியே செல்ல வேண்டும். கோவையில் இருந்து திண்டுக்கல், தேனி, மதுரை செல்லும் வாகனங்கள் தாழையூத்து, காவேரியம்மாபட்டி பிரிவு, வேடசந்தூர் பைபாஸ், சாலையூர், தாடிக்கொம்பு, திண்டுக்கல் வழியே செல்ல வேண்டும்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து பழனிக்கு வரும் அனைத்து பஸ்களும் காவேரியம்மாபட்டி பைபாஸ் வழியே பழனி அருகே சின்னாரக்கவுண்டன்வலசு பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ்நிலையத்துக்கு வர வேண்டும். கோவையில் இருந்து வரும் பஸ்களும் தாழையூத்து வழியே சின்னாரக்கவுண்டன்வலசு தற்காலிக பஸ்நிலையத்துக்கு வர வேண்டும்.
சிறப்பு டவுன் பஸ்கள்
தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து பழனிக்கு வர சிறப்பு டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்படும். எனவே பழனிக்கு புறநகர் பஸ்கள் வர அனுமதி இல்லை.
அதேபோல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கார்களில் பழனி வரக்கூடிய பக்தர்களுக்கு கொடைக்கானல் பைபாஸ் பிரிவு, கோவில் சுற்றுலா பஸ்நிலையம் ஆகிய இடங்களில் வாகன நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை பகுதியில் இருந்து பழனி வரும் கார்கள், சண்முகநதி பைபாஸ், பாலசமுத்திரம் சந்திப்பு வழியே கோசாலை பார்கிங் மற்றும் கார்த்தி பள்ளி வளாகத்தில் வாகன நிறுத்தம் வசதி செய்யப்பட்டுள்ளது. தாராபுரம் பகுதியில் இருந்து கார்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியாண்டவர் கலைக்கல்லூரி வளாகத்தில் வாகன நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதால் அசம்பாவித நடைபெறுவதை தவிர்க்க பழனியில் டிரோன்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.