மதுரையில் பரிதாபம்: விஷம் குடித்து தாய்-மகன் தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது


மதுரையில் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர் தனது தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

மதுரை


மதுரையில் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர் தனது தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

ஷேர்மார்க்கெட்டில் முதலீடு

மதுரை கோச்சடை அருகே உள்ள நடராஜ்நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 72). இவருடைய மகன் உமாசங்கர் (46). இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அனிதா அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் நடந்து வந்தது.

இந்த நிலையில் உமாசங்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்து கொள்வதற்காக தேனியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று தேனியில் உறவினர் வீட்டின் திருமணத்திற்காக 2-வது மனைவியுடன் சென்றார். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை அவர் மட்டும் வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று காலை 2-வது மனைவி வீட்டிற்கு வந்த போது கதவு திறக்கவில்லை. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தாயுடன் மகன் தற்கொலை

போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது விஜயலட்சுமியும், அவரது மகன் உமாசங்கரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடனே கரிமேடு போலீசார் அவர்களது உடல்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது 2-வது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அதில் பங்குச்சந்தையில் செய்த முதலீடு எல்லாம் நஷ்டம் அடைத்து விட்டது. எனவே கடன் வாங்கி உள்ளார். அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

உருக்கமான கடிதம்

இதற்கிடையில் போலீசார் வீட்டில் சோதனை செய்த போது உமாசங்கர் எழுதியதாக கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் "எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. எனது விவாகரத்து வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வந்து விட்டது. அதில் முதல் மனைவிக்கு விவகாரத்து கிடைத்து விட்டது. எனவே கோர்ட்டில் தெரிவித்தப்படி முதல் மனைவி கொண்டு வந்த சீர்வரிசை பொருட்களை எல்லாம் அவரது வீட்டில் கொடுத்து விடுங்கள். எங்களது இறுதி சடங்கை மாமா நீங்கள் எளிமையாக நடத்தி விடுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது கடன் பிரச்சினை மற்றும் முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகியவைதான் அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது என்றனர்.

தாயும், மகனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story