தடுப்பு சுவரில் லாரி மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி
தடுப்பு சுவரில் லாரி மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரியில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று கரூர் காந்திகிராமம் நோக்கி வந்துகொண்டு இருந்தது. அந்த வேனை கிருஷ்ணகிரி மாவட்டம் சிக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் (வயது 27) என்பவர் ஓட்டினார். சேலம் மாவட்டம் செம்மாண்டப்பட்டி அருகே உள்ள பெரிய பட்டியை சேர்ந்த சிவா (34), ஜெயக்குமார் (27) ஆகியோர் சுமை தூக்கும் தொழிலாளியாக வந்தனர்.
கரூர் வெங்கமேடு பகுதியில் வேலூர்-கரூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வேன் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் வேனில் இருந்த கிரானைட் கற்கள் சிவாவின் தலையிலும், ஜெயக்குமாரின் காலிலும் விழுந்தன. இதில், பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜெயக்குமார் படு காயங்களுடன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரூபி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.