வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
x

திருவாரூரில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர்


திருவாரூரில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு நவம்பர் மாதத்தில் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக வருகிற 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,178 வாக்குச்சாடி நிலையங்கள் உள்ளன.

10 லட்சத்து 36 ஆயிரம் வாக்காளர்கள்

இதில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 717 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 29 ஆயிரத்து 602 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 10 லட்சத்து 36 ஆயிரத்து 384 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து நன்னிலம் வட்டம், மகிழஞ்சேரி, பழங்குடி ஆகிய கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் தொடர்பாக வரப்பெற்ற புதிய வாக்காளர் படிவங்களின் உண்மைத்தன்மை குறித்து விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கே சென்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஊர்வலத்தை. வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் புவனா, நகராட்சி மேலாளர் முத்துக்குமரன், நுகர்வோர் அமைப்பினர், தீயணைப்பு துறையினர், பள்ளி மாணவ-மாணவிகள், ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.


Next Story