கோவில் திருவிழா நடத்த அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டம்


கோவில் திருவிழா நடத்த அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டம்
x

குளித்தலை அருகே கோவில் திருவிழா நடத்த அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கரூர்

ஆக்கிரமிப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பொருந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெலுங்குப்பட்டி பகுதியில் கம்பளத்து நாயக்கர்களுக்கு சொந்தமான சக்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா 14 மந்தையர்கள் சார்பில் கடந்த 6-ந்தேதி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இதில் முக்கிய நிகழ்ச்சியான மாடு மாலைத்தாண்டும் விழா நாளை (திங்கட்கிழமை) கோவில் முன்பாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் கோவிலுக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலத்தினை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திருவிழா நடத்த விடாமல் தனிநபர்கள் தடுத்து வருவதாகவும் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

காத்திருப்பு போராட்டம்

இந்தநிலையில் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து 14 மந்தையர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளித்தலை காவிரி நகரில் இருந்து ஊர்வலமாக 'கோவில் நிலத்தை மீட்டுக் கொடு' 'திருவிழாவிற்கு பாதுகாப்பு கொடு' என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தி கொண்டு ஊர்வலமாக குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்து, தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் புஷ்பாதேவி சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பை சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திருவிழா நடத்த போலீசார் பாதுகாப்பு வழங்கப்படும் என்று குளித்தலை துைண போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story