நீர்மட்டம் 102 அடியை எட்டியது: பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு; வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது


நீர்மட்டம் 102 அடியை எட்டியது:  பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு;  வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது
x

நீர்மட்டம் 102 அடியை எட்டியதால் பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 20 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

ஈரோடு

பவானிசாகர்

நீர்மட்டம் 102 அடியை எட்டியதால் பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 20 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணை

பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை ஆகும். தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும், அணை நிரம்பியபின் திறக்கப்படும் உபரி நீரும் மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆற்றின் மூலம் பவானிசாகர் அணையில் கலக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேல் அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

தண்ணீர் திறப்பு

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி மதியம் 12 மணிஅளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. இருந்தபோதிலும் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு உபரி நீர் திறக்கப்படவில்லை.

பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்து பொதுப்பணித்துறையில் வகுக்கப்பட்ட விதியின்படி அக்டோபர் மாதம் இறுதிவரை 102 அடிவரையிலும், நவம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி நேற்று காலை 9 மணிக்கு பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் 8 மதகுகள் மூலம் உபரி நீராக வினாடிக்கு 6,700 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பவானிசாகர் பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் பொங்கியண்ணன், அணை பிரிவு உதவி செயற்பொறியாளர் சுரேஷ் பாலாஜி ஆகியோர் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து விட்டனர். அப்போது தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பவானிசாகர் கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் வேடிக்கை

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டால் மேல் மதகுகள் வழியாக திறக்க வேண்டும். இந்த நிலையில் பில்லூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டதால் பவானிசாகர் அணைக்கு நேற்று மதியம் 1:30 மணியளவில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதனால் நேற்று மதியம் 1.30 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 7,758 கன அடி தண்ணீர் 9 மேல் மதகுகள் வழியாகவும், வினாடிக்கு 4572 கன அடி தண்ணீர் பவானி ஆற்றின் ஒன்பது கீழ்மதகுகள் வழியாகவும் திறந்துவிடப்பட்டது.

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேறியபோது பொதுமக்கள் அணையின் எதிரே உள்ள பாலத்தின் மேல் நின்று வேடிக்கை பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 20,507 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 20,503 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றின் மூலம் உபரி நீராக திறக்கப்படுவதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story