314 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
314 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள்.
314 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள்.
நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நவாஸ்கனி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், திருவாடனை ராம.கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் 314 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-
ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் சிறுபான்மையினர் மேம்பாட்டிற்காக தனி அலுவலகம் அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் உள்பட மேலும் 5 மாவட்டங்களில் விரைவில் அலுவலகம் தொடங்கப்பட உள்ளது.
மண்டபம் அகதிகள் முகாமிற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். பழமை வாய்ந்த பள்ளிவாசல் மற்றும் தேவலாயங்களை சீரமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பள்ளிவாசல், தேவலாயங்களை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டு நாகூர், ஏர்வாடி, முத்துப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் ஆலயங்கள் கண்டறியப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.2,833 கோடி நிதி ஒதுக்கீடு
இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் முழுமையாக குடிநீர் வழங்கிட தனி திட்டமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு அதற்காக ரூ.2,833 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளார். சிறந்த மாநில பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆளுமை திறனும் அனுபவம் தான் காரணம். அதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் கூடுதலாக வேலை வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.