விதிகளை மீறி பேனர்கள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? - ஐகோர்ட்டு சரமாரி கேள்வி


விதிகளை மீறி பேனர்கள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? - ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
x

விதிகளை மீறி பேனர்கள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

விதிகளை மீறி பேனர்கள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பர பலகை விழுந்து இளம்பெண் பலியான விவகாரம் மற்றும் விழுப்புரத்தில் அமைச்சரை வரவேற்க வைக்கப்பட்ட கொடி கம்பம் மூலம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது தொடர்பான சம்பவங்களை சுட்டிக்காட்டி விதிமீறல் பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடரப்பட்டிருந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விதிமீறி செயல்பட்ட பேனர்களை வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த சம்பவங்கள் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டினர். மேலும் அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள் கூட பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கின்றன என்று தெரிவித்தனர்.

விழுப்புரத்தில் சிறுவன் பலியான சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதிகள், கட்சிகளின் பெயரில் கொடிக்கம்பங்கள் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி தலைமை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு விழுப்புரம் சம்பவத்தில் தொடர்புடைய திமுக பிரமுகர் தரப்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே திமுக தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், விதிமீறி பேனர் வைப்பதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


Next Story