அண்ணாமலை ஆவேசத்துக்கு காரணம் என்ன? 26 ந்தேதி பிரதமரை சந்திக்கிறார்...!


அண்ணாமலை ஆவேசத்துக்கு காரணம் என்ன? 26 ந்தேதி பிரதமரை சந்திக்கிறார்...!
x

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என்று மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி இருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

சென்னை:

கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்தது கட்சிக்குள்ளும், அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.

தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்.

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என்று மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி இருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கட்சிக்குள்ளேயே இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.

அண்ணாமலை நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த கருத்தை தெரிவித்ததை மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை. கூட்டத்தில் இருந்த வானதி சீனிவாசன், "மையக்குழுவில் பேச வேண்டியதை இங்கு ஏன் பேசுகிறீர்கள். கட்சி நலன்தான் முக்கியம்" என்று கேட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த திடீர் ஆவேசத்துக்கான காரணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து கட்சி தலைமை பொறுப்புக்கு வந்த அண்ணாமலை கட்சி பணியையும் அதிகாரி போன்ற எண்ணத்திலேயே நடத்தி வருகிறார். தொண்டர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் யாராக இருந்தாலும் அவரை நேரடியாக நினைத்தவுடன் சந்திக்க முடியாது. அப்பாயின்ட்மென்ட் வாங்கியே சந்திக்க வேண்டும்.

மூத்த நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமலேயே முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது. இது உட்கட்சிக்குள் அதிருப்தியை உருவாக்கியது. இதனால் மூத்த தலைவர்கள் பலரது எதிர்ப்பை சம்பாதித்தார்.

அதுபற்றி யாரும் வெளியே சொல்லாமல் இருந்தது நேற்றைய கூட்டத்தில் அது வெளிப்படையாக தெரிந்தது. அண்ணாமலை ஆரம்பத்திலேயே பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் எங்கள் இலக்கு என்று கூறி வருகிறார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இது சாத்தியமா? அவர்கள் எத்தனை சீட் ஒதுக்குவார்கள் என்பதே கேள்விக்குறி. தி.மு.க. சொல்வதை கேட்டு காங்கிரஸ் இருப்பதுபோல் பா.ஜனதாவும் இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. விரும்புகிறது.

அதற்கு மாறாக அண்ணாமலை அதிரடியாக கூறும் கருத்துக்களை அ.தி.மு.க. ஏற்கவில்லை. அண்ணாமலையை கடுமையாக விமர்சிக்கிறது. சகிப்புத்தன்மை இல்லை. அண்ணாமலை தமிழக பா.ஜனதாவுக்குத் தான் தலைவர். திராவிட கட்சிகளின் தயவு இல்லாமல் பா.ஜனதா வளர முடியாது என்ற கருத்துக்கள் பா.ஜனதாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் பா.ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக இருந்த நிர்மல்குமார் விலகி அ.தி.மு.க.வில் இணைந்தபோது அண்ணாமலையை குறிவைத்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதை அ.தி.மு.க. தயாரித்து கொடுத்த அறிக்கை என்பது அண்ணாமலையின் கருத்தாக உள்ளதாக கூறப்படுகிறது..

இப்படிப்பட்ட சூழலில் அ.தி.மு.க.வை அனுசரித்து போகும்படி டெல்லி தலைவர்கள் சொல்வதை எப்படி ஏற்க முடியும் என்று அண்ணாமலை கருதுகிறார்.

தமிழகத்தில் பா.ஜனதாவை திராவிட கட்சிகள் வளர விடாமல் தடுக்கும். ஒரு சில தொகுதிகளை மட்டுமே தருவார்கள். அதற்காக கையேந்த வேண்டுமா? கட்சி எடுத்த தவறான முடிவுகள் அதன் வளர்ச்சியை தடுத்து இருக்கிறது என்பதற்கு ஆந்திரா ஒரு உதாரணம்.

என்.டி.ராமராவ் அசைக்க முடியாத தலைவராக இருந்தபோதும் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு 6 எம்.பி. தொகுதிகளையும், 22 எம்.எல்.ஏ. தொகுதிகளையும் கைப்பற்றியது. அதன்பிறகு சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைத்தது. இன்று வரை அங்கு வளர முடியவில்லை.

அப்படி ஒரு நிலை தமிழகத்திலும் வர வேண்டுமா? என்பது அண்ணாமலையின் கேள்வி. இதையும் தாண்டி கூட்டணிதான் தேவை என்றால் பதவி தேவையில்லை. சாதாரண தொண்டராகவே இருக்கலாம் என்பது அண்ணாமலையின் முடிவு.

டெல்லி மேலிடம் ஏதோ ஒரு திட்டத்துடனேயே அதிகாரியாக இருந்தவரை மாநில தலைவராக நியமித்தது. எதிர்பார்த்தது போலவே அவரது தலைமையின் கீழ் பா.ஜனதா பேசப்படும் கட்சியானது என்பது டெல்லி தலைமைக்கும் தெரியும். எனவே அவ்வளவு எளிதில் அவரை விட்டுக்கொடுக்காது என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 26 ந்தேதி அண்ணாம்லை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியையும், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து எடுத்து கூற உள்ளார். இதற்காக டெல்லியில் நேரம் கேட்டு உள்ளார்.


Next Story