பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதது ஏன்?


பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதது ஏன்?
x
தினத்தந்தி 17 March 2023 6:45 PM GMT (Updated: 17 March 2023 6:45 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதது ஏன்?

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

மனம் திறக்கும் மாணவர்கள்

மாணவர்களின் வாழ்க்கையில் பொதுத்தேர்வு என்பது ஒரு படிக்கல்லாக உள்ளது. உயர்கல்விக்கு பிளஸ்-2 மதிப்பெண் முக்கியம் என்பதால் இந்த பொதுத்தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்கொள்வார்கள். மிகமுக்கிய தேர்வு என்பதால் என்னவோ பொதுத்தேர்வு என்றாலே பல மாணவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. ஆனாலும் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் தன்னம்பிக்கையூட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த 13-ந் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வானது வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி நடந்த தமிழ் தேர்வை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 193 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 591 மாணவர்களும், 11 ஆயிரத்து 504 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 95 மாணவ- மாணவிகள், பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில் கடந்த 13-ந் தேதி நடந்த தமிழ் தேர்வை 21 ஆயிரத்து 543 மாணவ- மாணவிகள் எழுதினர். 1,552 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதுபோல் 15-ந் தேதி நடைபெற்ற ஆங்கிலம் பாடதேர்வை 21 ஆயிரத்து 371 பேர் எழுதினர். 1,724 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 123 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 350 மாணவர்கள், 10 ஆயிரத்து 218 மாணவிகள், தனித்தேர்வர்கள் 191 பேர் என மொத்தம் 20,804 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் கடந்த 13-ந் தேதி நடைபெற்ற தமிழ், 15-ந் தேதி நடைபெற்ற ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களை 9 ஆயிரத்து 83 மாணவர்கள், 8 ஆயிரத்து 655 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 738 பேர் எழுதினர். 2,831 மாணவ-மாணவிகள், 44 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை.

பொதுமக்கள் அதிர்ச்சி

இது கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மத்தியில் தற்போது படிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டதா? என்ற கேள்வி பலரின் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து தேர்வு எழுதாத விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தாமதமாக பள்ளியில் சேர்ந்ததால்...

விழுப்புரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் விக்னேஷ்:-

நான் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்றேன். ஆனால் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் சேர்க்கை அடிப்படையில் நான் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். தாமதமாக பள்ளியில் சேர்ந்ததால் என்னால் சரிவர படிக்க முடியவில்லை, பொதுத்தேர்வுக்கும் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெறுவது கடினமாக இருக்கும் என்று கருதி பொதுத்தேர்வு எழுத செல்லவில்லை. இருப்பினும் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற முயற்சி செய்வேன்.

உடல் நிலை சரியில்லாததால்

விழுப்புரம் பகுதியை சேர்ந்த மாணவர் முகமதுயாசின்:-

எனக்கு உடல்நிலை சரியில்லாததால் பிளஸ்-2 தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டரின் அறிவுரைப்படி தற்போது வீட்டில் இருந்தவாறு உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இனி வரக்கூடிய தேர்வுக்காக என்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறேன். பள்ளி ஆசிரியா்கள் என்னை தொடர்புகொண்டு தேர்வுக்கு வராததற்கான காரணம் குறித்து கேட்டதற்கு நான் உடல்நிலை சரியில்லை என்று கூறினேன். எனக்கு உடல்நிலை ஓரளவுக்கு சரியானதும் அடுத்து நடைபெறக்கூடிய தேர்வை எழுதுவேன் என்று ஆசிரியர்களிடம் கூறியுள்ளேன். அதுபோல் தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடத்தேர்வுகளுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வுக்கு நான் நல்லமுறையில் படித்து அத்தேர்வை எழுதி வெற்றி பெறுவேன்.

குடும்ப வறுமை காரணமாக

விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் ஷேக்அப்துல்உசைன்:-

எனது தந்தை ஷேக்உசைன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். இதனால் குடும்ப வறுமை காரணமாக என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. வீட்டு வாடகையும் செலுத்த வேண்டியுள்ளது, எனது தங்கையையும் படிக்க வேண்டும். இவை அத்தனை பொறுப்பும் என் தலை மீது விழுந்ததால் பள்ளிக்கு செல்லவில்லை. எனது குடும்ப சூழ்நிலையினால் வாழ்வாதாரம் கருதி வேலைக்கு செல்ல முடிவு செய்து தற்போது விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு போதிய சம்பளம் கிடைக்கிறது. இதை வைத்து எனது குடும்பத்தை கவனித்து வருகிறேன். ஆசிரியர்கள் என்னை தொடர்புகொண்டு தேர்வு எழுத வருமாறு அழைத்தார்கள். ஆனால் நான் தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல் ஆகிய 3 தேர்வுகளையும் எழுதவில்லை. மறு தேர்வு எழுதுவது பற்றி இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை.

ஐ.டி.ஐ. படிக்க விருப்பம்

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்:-

நான் இந்த வருடம் 12-ம் வகுப்பில் 3 மாதங்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றேன். அதன் பிறகு எனக்கு பள்ளியில் படிக்க விருப்பமில்லாததால் தொடர்ந்து செல்லவில்லை. பின்னர் ஐ.டி.ஐ. படிக்க விருப்பம் உள்ளதாக எனது பெற்றோரிடம் கூறினேன். அவர்களும் சம்மதம்தெரிவித்து விட்டனர். இதனால் நான் பிளஸ்-2 தேர்வு எழுதவில்லை. அடுத்த ஆண்டு ஐ.டி.ஐ. படிக்க இருக்கிறேன். தற்போது குடும்பத்தின் சூழ்நிலை கருதியும், வீட்டில் இருக்க பிடிக்காததாலும் ஒரு கடையில் வேலைக்கு செல்கிறேன் என்றார்.

வேலை தேடி சென்றேன்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்:-

நான் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் குரூப் படித்து வந்தேன். கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினேன். இந்த ஆண்டு ஒரு மாதம் தான் பள்ளிக்கு சென்றேன். அதன் பின்னர் நான் பள்ளிக்கு செல்லவில்லை. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் நான் எனது பெற்றோருடன் வேலை தேடி கோவைக்கு சென்று விட்டேன். தொடர்ந்து பள்ளிக்கு செல்லாததால் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை என்றார்.

கிணறுவெட்டும் வேலைக்காக

ரிஷிவந்தியம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி:-

நான் ரிஷிவந்தியம் அருகே உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக கிணறு வெட்டும் வேலைக்காக எனது பெற்றோருடன் நானும் மேல்மருவத்தூருக்கு சென்று விட்டேன். இதனால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. நான் வெகுநாட்களாக பள்ளிக்கு வராததை அறிந்த ஆசிரியர்கள் பலமுறை என்னை தேடி என சொந்த ஊருக்கு வந்து வீட்டில் இருந்த எனது பாட்டியிடம் என்னை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் நான் தொடர்ந்து மேல்மருவத்தூரிலேயே தங்கி இருந்ததால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. மீண்டும் சொந்த ஊருக்கு வரும்போது படிப்பை தொடருவேன் என்றார்.


Related Tags :
Next Story