புகழூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?


புகழூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?
x

32 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் புகழூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

தீயணைப்பு நிலையம்

கரூர் மாவட்டம், புகழூர், வேலாயுதம்பாளையம், காகிதபுரம், நொய்யல், புன்னம் சத்திரம், தளவாபாளையம், மண்மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் நீண்ட தொலைவில் உள்ள கரூரில் இருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டியது இருந்தது. இதையடுத்து புகழூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட நாளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கடந்த 1990-ம் ஆண்டு ஒரு வாடகை கட்டிடத்தில் புகழூர் தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது. பின்னர் அந்த கட்டிடத்தில் 29 ஆண்டுகள் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. இதையடுத்து சில காரணங்களால் தீயணைப்பு நிலையம் கடந்த 2019-ம் ஆண்டு திருக்காடுதுறை ஊராட்சி ஆலமரத்து மேடு பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கும் வாடகைகட்டிடத்தில் தான் தீயணைப்பு நிலையம் தற்போது வரை இயங்கி வருகிறது. இதனால் கடந்த 32 ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தின் தான் செயல்பட்டு வருகிறது.

கோரிக்கை

இங்கிருந்து கரூர், நாமக்கல் பகுதிகளில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் சென்று வருகிறது. மேலும், கோவில் திருவிழா, கும்பாபிஷேகம், மாநாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கும் தீயணைப்பு வாகனங்கள் சென்று வருகின்றன. தீயணைப்பு நிலையம் தொடர்ந்து 32 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் கட்டிடத்தின் உரிமையாளர்கள் அவ்வபோது திடீரென தங்களுக்கு கட்டிடம் வேண்டும் என கூறுவதால் தீயணைப்பு நிலையத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே நிரந்தரமாக புகழூர் நகராட்சிக்குட்பட்ட புறம்போக்கு நிலத்தில் புகழூர் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

நடவடிக்கை இல்லை

வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்:-

வாடகை கட்டிடத்தில் இயங்கு வரும் புகழூர் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும் நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகளூர் நகராட்சி பகுதியில் புறம்போக்கு நிலம் உள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் தீயணைப்பு நிலையத்தை கட்டி தர வேண்டும்.

வற்புறுத்துகின்றனர்

கரைப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்:-

புகழூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் அடிக்கடி அந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் அதனை காலிசெய்யக்கோரி வற்புறுத்தி வருகின்றனர். இதனால் தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதற்கு நிரந்தரமாக ஒரு இடத்தை ஒதுக்கி தீயணைப்பு நிலையத்திற்கு கட்டிடம் கட்டி கொடுக்க உதவ வேண்டும்.

பெரும் தொகை வீணாகிறது

நந்தவனத்தை சேர்ந்த சுரேந்தர்:-

புகழூர் தீயணைப்பு நிலையம் கடந்த 32 ஆண்டுகளாக வாடகை கட்டிடங்களில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசிற்கு ஆண்டுக்கு பெரும் தொகை வீணாகி வருகிறது. புகழூர் பகுதியில் புறம்போக்கு நிலங்கள் அதிகம் உள்ளது. அதில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்கலாம். அப்போது செய்தால் வீண் செலவு வருவது குறைவு. அதாவது வாடகை கொடுக்க வேண்டாம். பல்வேறு ஊர்களில் சொந்தமான இடங்களில் தான் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் இங்கு செய்தால் நன்றாக இருக்கும்.

வெயில் காலம்...

திருக்காடுதுறையை சேர்ந்த சுப்பிரமணி:-

புகழூர் தீயணைப்பு நிலையம் தகரக்கொட்டையில் செயல்படுகிறது. வெயில் காலம் தொடங்கி விட்டதால் இந்த தகரக் கொட்டகையில் தீயணைப்பு வீரர்கள் அமர்ந்திருக்க முடியாது. மேலும் தரமான கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் இயங்க வேண்டும். எனவே இந்த பகுதியில் புறம்போக்கு நிலம் உள்ளதா என ஆய்வு செய்து அங்கு தரமான புதிய தீயணைப்பு நிலைய கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story