பழையனூரில், அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்படுமா?
பழையனூரில், அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்படுமா?
25 ஆண்டுகளாக திறந்தவெளியில் நெல்மூட்டைகள் அடுக்கிவைக்கும் நிலை உள்ளது. எனவே பழையனூரில் அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திறந்த வெளியில் நெல்மூட்டைகள்
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்த வெளியில் வைத்து அரசு சார்பில் நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதே இடத்தில் அருகாமையில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இடம் தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இடம் ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாத்தனூர், பழையனூர், வடகட்டளை, கோம்பூர், நாகங்குடி, புனவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் குறுவை மற்றும் சம்பா தாளடி அறுவடை செய்யப்பட்ட நெல்களை, பழையனூரில் திறந்த வெளியிலேயே மூட்டைகளாக அடுக்கி வைக்கின்றனர்.
25 ஆண்டுகளாக சிரமம்
திடீரென மழை பெய்தால் நெல்மூட்டைகள், மழை தண்ணீரில் நனைந்து விடுகின்றன. இதனால் நெல்லில் ஈரப்பதம் ஏற்படும் வாய்ப்பு ஏற்படுவதுடன், சில நெல் மூட்டைகளில் நெல் முளைத்து விடுகிறது. திறந்த வெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதால், கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களை அடைந்து வருவதாக அந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். எனவே பழையனூரில் கொள்முதல் நிலையம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பழையனூர் பகுதியை சேர்ந்த விவசாயி லெட்சுமணன், அறுவடை செய்யப்பட்ட நெல்களை பல ஆண்டுகளாக பழையனூரில் திறந்த வெளியில் வைத்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கட்டிடம் கட்டப்படவில்லை
நெல்மூட்டைகள் திறந்த வெளியில் வைக்கப்படுவதால் மழையில் நனைந்து சேதம் ஏற்பட்டது. மேலும், அடுக்கி வைத்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யப்படும் வரை இரவு முழுவதும் கண்விழித்து பாதுகாக்க வேண்டும். இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. இத்தகைய சிரமங்களை தவிர்க்க, பழையனூரில் தற்போது திறந்த வெளியில் நெல் கொள்முதல் செய்யப்படும் இடத்தின் அருகாமையில் கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடம் ஒதுக்கி 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த இடத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால், விவசாயிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். அதனால் நடப்பாண்டில் கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
பழையனூர் பகுதியை சேர்ந்த விவசாயி பாபு, இயற்கை இடர்பாடுகள் மாறி வருவதால் பருவம் தவறிய மழை எப்போது வருகிறது என்று கணிக்க முடியாத கால கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்களை கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைப்பதில் சிரமங்களே ஏற்படுகிறது. திறந்த வெளியில் வைக்கப்படும் நெல்கள் மழையில் நனைந்தால் அதன் பாதிப்பு விவசாயிகளுக்கே ஏற்படுகிறது. அதனால், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பழையனூரில் அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் விரைவாக கட்டித்தர வேண்டும். வடபாதிமங்கலம் புனவாசலிலில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை விரைவாக பயன்பாட்டிற்கு விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.